சாம்பார்

துவரம் பருப்பு சாம்பார்

குறுந்தகவல்

துவரம் பருப்பு சாம்பார் நாம் உண்ணும் உணவுகளில் ஒரு சிறந்த உணவாக கருதப்படுகிறது. ஏனெனில் சாம்பாரில் துவரம் பருப்பு, வெங்காயம், தக்காளி, புளி என்று பல பொருட்களை வைத்து தயார் செய்யப்படுகிறது. ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு தனித்தன்மையைக் கொண்டது. உதாரணத்துக்கு துவரம் பருப்பு நம் உடலில் ரத்த அழுத்தம் குறைய, காயங்கள் ஆற, ரத்த சோகை ஏற்படாமல் இருக்க உதவுகிறது, வெங்காயம் அதிலும் சிறிய வெங்காயம் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் மற்றும் புளி கிருமி நாசினியாக செயல்படுகிறது.

மூலப்பொருள்

துவரம் பருப்பு – 200 கிராம்
புளி – எலுமிச்சை அளவு
சிறிய வெங்காயம் – 10 (பெரிய வெங்காயம் – 1 நடுத்தர அளவு)
தக்காளி – 1
காய்ந்த மிளகாய் – 1
பூண்டு – 5 பல்
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை (பெருங்காயம் கட்டி – சிறியது)
குழம்பு மிளகாய்த் தூள் – 2 மேசைக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
வெந்தயம் – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
எண்ணெய் – தேவையான அளவு
சாம்பார் பொடி – 2 தேக்கரண்டி
தண்ணீர் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
கருவேப்பில்லை – சிறிது
பச்சை கொத்தமல்லி – சிறிது

செய்முறை

துவரம் பருப்பை நன்றாக கழுவி வைத்துக்கொள்ளவும். வெங்காயம், தக்காளி, பூண்டு ஆகிய மூன்றையும் நல்ல பொடிப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். குக்கரில் கழுவிய துவரம் பருப்பு, மஞ்சள் தூள், பெருங்காயம், நறுக்கிய வெங்காயம், தக்காளி, பூண்டு மற்றும் தண்ணீரை ஊற்றி வேகவைக்கவும். பருப்பு வெந்தவுடன் ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும்.

புளியை தண்ணீரில் போட்டு அரைமணி நேரம் ஊறவைக்கவும். பருப்பு வெந்தவுடன் குக்கரிலிருந்து மற்றோரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும். சாம்பார் கலவை பாத்திரத்தில் உப்பு, குழம்பு மிளகாய் தூள் போட்டு நன்றாக கலக்கவும். புளியை நன்றாக சாறு வரும் வரையில் நன்றாக கரைத்து ஒரு பாத்திரத்தில் வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.

சாம்பார் கலவை பாத்திரத்தை அடுப்பில் வைக்கவும். சாம்பார் கொதித்து கொண்டிருக்கும்போது காய்கள் (முள்ளங்கி, முருங்கைக்காய், மாங்காய், கத்திரிக்காய், வெண்டைக்காய்) இதில் எதாவது ஒன்று அல்லது எதாவது இரண்டு காய்கள் இருந்தால் போடலாம். பிறகு கரைத்து வைத்திருக்கும் புளி தண்ணீரை சாம்பாரில் ஊற்றவும்.

சாம்பார் நன்றாக கொதித்தவுடன் தாளிக்கும் கரண்டியில் எண்ணையை விட்டு கடுகு, வெந்தயம், சீரகம் மற்றும் காய்ந்த மிளகாயை போட்டு நன்றாக தாளித்து அந்த பாத்திரத்தில் போடவும்.

இறுதியாக சாம்பார் நன்றாக கொதித்தவுடன் சாம்பார் பொடி, கருவேப்பிலை, பச்சை கொத்தமல்லி போட்டு நன்றாக கலந்து பின்பு அடுப்பை அணைத்து விட்டு பாத்திரத்தை இறக்கிவைக்கவும்.

இந்த சுவையான மணமான சாம்பாரை சுட சுட சாதத்தில் போட்டு , நெய் விட்டு அப்பளம், வற்றல்,பொரியல், வறுவல் என்று ஏதாவது சேர்த்து சாப்பிடலாம். அசைவ பிரியர்கள் முட்டை, கருவாடு வறுத்து, மீன் வறுவல் என்று ஏதாவது சேர்த்து சாப்பிடலாம். இந்த சாம்பாரை இட்லிக்கு அல்லது தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம். சாம்பாரில் உளுந்து வடை போட்டு ஊறவிட்டு சாப்பிட மிக சுவையாக இருக்கும்.

குறிப்பு

இந்த சாம்பார் 4 நபர்கள் தாராளமாக சாதத்தில் ஊற்றி சாப்பிடலாம். வெண்டைக்காயை சாம்பாரில் போடுவதற்கு முன்பு நன்றாக வதக்கி போடவும். மாங்காய்யை சாம்பார் பாதி கொதியில் அல்லது காய்(கள்) பாதி வெந்தவுடன் போடலாம்.

“சாம்பார்” அதற்கு 6 மறுமொழிகள்

  1. […] குறிப்பு : சிறியவர்கள் பெரியவர்கள் யாராக இருந்தாலும் முழு மிளகு சாப்பிட தயங்கி ஒதுக்கி வைப்பர். ஆதலால் உரலில் மிளகைப் போட்டு நல்ல பொடிப் பொடியாக்கி பொங்கலில் போட்டால் அனைவரும் தவிர்க்காமல் சாப்பிடுவர். இந்த பொங்கலுடன் தேங்காய் சட்னி அல்லது சாம்பாருடன் […]

    Like

  2. […] பொங்கலுடன் தேங்காய் சட்னி அல்லது சாம்பாருடன் சேர்த்து சாப்பிட சுவையாக […]

    Like

  3. […] பொங்கலுடன் தேங்காய் சட்னி அல்லது சாம்பாருடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக […]

    Like

  4. […] பொங்கலுடன் தேங்காய் சட்னி அல்லது சாம்பாருடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக […]

    Like

  5. […] பொரியலை வெறுமனே சாப்பிடலாம் அல்லது சாம்பார் மற்றும் காரக்குழம்புக்கு தொட்டு […]

    Like

  6. […] பொரியலை வெறுமனே சாப்பிடலாம் அல்லது சாம்பார் மற்றும் காரக்குழம்புக்கு தொட்டு […]

    Like

வெண்பொங்கல் (புழுங்கல் அரிசி) – அறிவோம் சுவையான சமையல் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி