குறுந்தகவல்
இறால் சாப்பிடுவதற்கு மிகவும் மென்மையாகவும் சுவையாகவும் இருக்க கூடிய அசைவ உணவுகளில் ஒன்றாகும். இந்த இறால் சாப்பிடுவதால் கண் பார்வை சிறக்க, முடி உதிர்வை தவிர்க்க, முக்கியமாக உடல் எடை குறைக்க வாரத்தில் ஒரு நாள் சாப்பிட எடை குறையும், இத்துடன் பல மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது. இதில் எவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ளதோ அதே போல் இதில் அலர்ஜி ஏற்படுத்த கூடிய குணமும் உள்ளது. ஆதலால் அலர்ஜி உள்ளவர்கள் பார்த்து சாப்பிடவும். இந்த தொக்கில் வெங்காயம், இஞ்சி, பூண்டு, சோம்பு போன்ற பொருட்கள் சேர்த்திருப்பதால் சாப்பிடுவதற்கு சுவையாகவும், மணமாகவும் மற்றும் உடல் ஆரோக்கியத்துக்கு உகந்ததாகும்.
மூலப்பொருள்
இறால் – 250 கிராம்
பெரிய வெங்காயம் – 3
பெரிய தக்காளி – 3
இஞ்சி – ஒரு பெரிய துண்டு
பூண்டு பல் – 8
சோம்பு – 2 தேக்கரண்டி
குழம்பு மிளகாய் தூள் – 4 தேக்கரண்டி
தேங்காய் – 1/4 மூடி
மஞ்சள் – தேவையான அளவு
கருவேப்பிலை – தேவையான அளவு
கொத்தமல்லி – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை
- இறாலை நன்றாக தண்ணீர் ஊற்றி கழுவி தோல் உரித்து வைத்துக் கொள்ளவும்.
- நன்றாக வடிக்கட்டி மஞ்சள் மற்றும் உப்பைப் போட்டு நன்றாக பிசறி பின்பு இரண்டு அல்லது மூன்று முறை கழுவி ஒரு பாத்திரத்தில் நன்றாக வடிக்கட்டி வைத்துக் கொள்ளவும் (மஞ்சள் மற்றும் உப்பைப் போட்டு கழுவதால் அதில் ஏதேனும் கிருமிகள் இருந்தால் அழிந்துவிடும்).
- தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும்.
- இஞ்சி மற்றும் பூண்டை நன்றாக அரைத்து வைத்துக் கொள்ளவும் (உரல் அல்லது அம்மியில் போட்டு அரைத்தால் மணமாகவும் சுவையாகவும் இருக்கும்).
- துருவிய தேங்காய் மற்றும் சோம்பை போட்டு நன்றாக மையாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- வெங்காயம் மற்றும் தக்காளியை நன்றாக பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- எண்ணெய் சட்டியை அடுப்பில் வைத்து இரு தேக்கரண்டி எண்ணெய்யை ஊற்றவும்.
- எண்ணெய் நன்றாக காய்ந்ததும் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை போட்டு நல்ல பொன்னிறமாக வரும் அளவுக்கு வதக்கவும்.
- தக்காளியை போட்டு வதக்கும் பொழுது தேவையான அளவு உப்பை போடவும் (தக்காளி வதக்கும் பொழுது உப்பு சேர்ப்பதால் விரைவில் தக்காளி வதங்கிவிடும்). நன்றாக வதங்கியதும் அதில் இறால் போட்டு லேசாக வதக்கவும்.
- இறால் அரை வேர்காடு வதங்கியதும் குழம்பு மிளகாய்த் தூள், அரைத்து வைத்து உள்ள கலவைகள் இஞ்சி பூண்டு மற்றும் தேங்காய் சோம்பு போட்டு நன்றாக கலக்கவும்.
- நன்றாக கிளறிய பிறகு கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை போட்டு கலக்கவும்.
- இறால் தொக்கு மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி பின்பு தட்டை வைத்து மூடவும்.
- சிறிது நேரம் கழித்து தட்டை எடுத்து பார்க்கவும். தொக்கு நன்றாக கொதித்து கெட்டியாகி இருக்கும். அதில் இறால் நன்றாக வெந்திருக்கிறதா என்று பார்க்க வேண்டும். இன்னும் வேகவில்லை என்றால் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மறுபடியும் தட்டை வைத்து மூடி வேக வைக்கவும்.
- நன்றாக இறால் வெந்தவுடன் ஒரு கிளறு கிளறி பின்பு அடுப்பை அணைத்து விட்டு இறக்கி வைக்கவும்.
- இந்த இறால் தொக்கு நல்ல கொதிக்க விடுவதால் இறால்களில் மசாலா நன்றாக ஊறி சாப்பிடுவதற்கு மிகவும் மணமாகவும் மற்றும் சுவையாகவும் இருக்கும்.
- இதை சாம்பார், ரசம், தோசை, இட்லி மற்றும் மீன் குழம்பிற்கு தொட்டு சாப்பிட மிக சுவையாக இருக்கும். அதுவும் தயிர் சாதத்துடன் சாப்பிட அமிர்தமாக இருக்கும்.
குறிப்பு : இறால் அலர்ஜி ஏற்படுத்த வல்லது அதனால் முதன் முதலில் சாப்பிடுவர்கள் கொஞ்சமாக சாப்பிட்டு பார்த்து எந்த பாதிப்பும் இல்லை என்றால் மட்டும் தொடரவும் அல்லது தவிர்க்கவும். அலர்ஜி உள்ளவர்கள் கூடிய வரை தவிர்ப்பது சால சிறந்தது ஆசைக்கு வேண்டும் என்றால் சிறிதளவு சாப்பிடலாம். மற்றபடி இது அனைவராலும் சாப்பிட கூடிய உணவாகும். கொஞ்சம் காரம் சேர்க்கவேண்டும் என்றால் இறக்கும் நேரத்தில் சிறிதளவு மிளகு தூள் போட்டு கலக்கி இறக்கவும். இப்படி செய்தால் காரம் தூக்கலாகவும், சுவையாகவும் மற்றும் சளிக்கு சிறந்தது.


பின்னூட்டமொன்றை இடுக