குறுந்தகவல்
புடலங்காய் நீர் காய் வகையை சேர்ந்தது. இந்த காயில் நீர் சத்து அதிகமாக இருப்பதால் மலச்சிக்கல் நீங்கும். இந்த காயை பொரியலாகவோ அல்லது கூட்டாகவோ செய்து சாப்பிடலாம். இதில் வைட்டமின்கள் ஏ, பி, சி இருப்பதனால் கொழுப்பை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்க உதவுகிறது. அதுமட்டும் இன்றி நரம்புகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கவும், நினைவாற்றல் அதிகரிக்கவும், மலட்டுத்தன்மையை போக்கவும் சிறப்பாக செயல்படுகிறது.
மூலப்பொருள்
புடலங்காய் – 1/2 கிலோ
தேங்காய் – 1/4 மூடி
வெங்காயம் – 2 (பெரியது )
கடுகு – 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 3
எண்ணெய் – 1 மேஜைக்கரண்டி
கல் உப்பு – 1 மேஜைக்கரண்டி
கருவேப்பிலை – தேவையான அளவு
செய்முறை
புடலங்காயை நன்றாக கழுவி சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நறுக்கி வைத்துள்ள புடலங்காய் மற்றும் கல் உப்பு போட்டு பிசறி வைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். தேங்காய்யை துருவி வைத்துக்கொள்ளவும். எண்ணெய் சட்டியை அடுப்பில் வைக்கவும். பிறகு எண்ணெய்யை ஊற்றி கடுகு, உளுந்து, கருவேப்பிலை மற்றும் காய்ந்த மிளகாய் காம்பை பிய்த்து பிறகு போட்டுத் தாளிக்கவும். நன்றாக தாளித்தவுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
நல்ல பொன்னிறமாக வதங்கியதும் புடலங்காயை போட்டு வதக்கவும். சிறிது வதக்கியதும் தண்ணீரை லேசாக தெளிக்கவும். பிறகு நன்றாக வதக்கவும். சிறிது நேரம் தட்டை மூடி வேகவைக்கவும். புடலங்காய் வெந்ததும் துருவி வைத்துள்ள தேங்காயை போட்டு வதக்கிய பிறகு அடுப்பை அனைத்து விட்டு இறக்கி வைக்கவும். இந்த பொரியலை வெறுமனே சாப்பிடலாம் அல்லது சாம்பார் மற்றும் காரக்குழம்புக்கு தொட்டு சாப்பிடலாம்.
குறிப்பு : இந்த பொரியலை அனைவரும் விரும்பி சாப்பிடுவர். காரக்குழம்பு சாதத்துக்கு புடலங்காய் பொரியலை தொட்டு சாப்பிட மிக சுவையாக இருக்கும் அது மட்டும் இன்றி கூடவும் சாப்பிடுவர்.


பின்னூட்டமொன்றை இடுக