வெண்பொங்கல் (புழுங்கல் அரிசி)

Venpongal Puzhngal Arisi

குறுந்தகவல்

புழுங்கல் அரிசி விரைவாக ஜீரணமாக கூடிய உணவாகும். ஏனென்றால் ஏற்கனவே நெல்லை வேகவைத்து உமி தனியாக அரிசி தனியாக பிரித்து வைப்பர். அதனால் சீக்கிரமாகவே அரிசி வெந்துவிடும். இது உடம்புக்கு ஆரோக்கியத்தையும் கொடுக்கும். இந்த அரிசியுடன் பயத்தம் பருப்பு சேர்ப்பதால் வயிற்று புண்ணை ஆற்றுவதற்கு சிறந்த மருந்தாகும்.

மூலப்பொருள்

பொன்னி புழுங்கல் அரிசி – 1 ஆழாக்கு
பயத்தம் பருப்பு – 1/2 ஆழாக்கு
மிளகு – 1 மேஜைக்கரண்டி
சீரகம் – 1 மேஜைக்கரண்டி
இஞ்சி – ஒரு சிறிய துண்டு
கருவேப்பிலை – தேவையான அளவு
நெய் – 2 மேஜைக்கரண்டி
நல்லெண்ணெய் – 2 மேஜைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
முந்திரி பருப்பு – 8

செய்முறை

அரிசியையும் பருப்பையும் தனித்தனியாக பாத்திரத்தில் அரை மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு அரிசியையும் பருப்பையும் நன்றாக கழுவி குக்கரில் போட வேண்டும். குக்கரில் 41/2 ஆழாக்கு தண்ணீர் ஊற்றி மற்றும் உப்பை போட்டு மூடி பிறகு வெயிட் போட்டு அடுப்பில் வைக்கவும். பொங்கல் குழைவாக வர வேண்டும் என்பதால் சாதத்துக்கு வேகவைப்பது விட கூட 3 விசில் வைக்கவும்.

குக்கரில் ஆவி அடங்கியதும் ஒரு எண்ணெய் சட்டியில் அடுப்பில் வைத்து நெய் மற்றும் எண்ணெய் விட்டு மிளகு, சீரகம், இஞ்சி, கருவேப்பிலை மற்றும் முந்திரி பருப்பு போட்டு தாளித்து குக்கரை திறந்து போடவும். பின்பு பொங்கலை நன்றாக கிண்டிவிடவும். இந்த பொங்கல் கம கம என்று மணமாகவும் சுவையாகவும் இருக்கும்.

குறிப்பு : சிறியவர்கள் பெரியவர்கள் யாராக இருந்தாலும் முழு மிளகு சாப்பிட தயங்கி ஒதுக்கி வைப்பர். ஆதலால் உரலில் மிளகைப் போட்டு நல்ல பொடிப் பொடியாக்கி பொங்கலில் போட்டால் அனைவரும் தவிர்க்காமல் சாப்பிடுவர். இந்த பொங்கலுடன் தேங்காய் சட்னி அல்லது சாம்பாருடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

பின்னூட்டமொன்றை இடுக