துவரம் பருப்பு ரசம்

Paruppu Rasam

குறுந்தகவல்

ரசம் இல்லாமல் மதிய சாப்பாடு இருக்காது. எந்த வகையான குழம்பு இருந்தாலும் தயிர் சாதம் சாப்பிடுவதற்க்கு முன்பு ரசம் ஊற்றி சாப்பிடுவார்கள். ஏனெனில் ரசத்தில் புளி முக்கிய பங்கு வகிக்கிறது. புளி ஜீரண சக்தியை அதிகரிக்க வல்லது. ஆதலால் எந்த உணவு உண்டாலும் ரசம் சாப்பிடுவதால் வயிறு உபாதைகள் வராது. இதோடு துவரம் பருப்பு சேர்ப்பதால் நம் உடலில் ரத்த அழுத்தம் குறைய, காயங்கள் ஆற, ரத்த சோகை ஏற்படாமல் இருக்க உதவுகிறது. பெருங்காயத்தூளை உணவில் சேர்ப்பதால் அஜீரண கோளாறு ஏற்படாமல் இருக்க, எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்று பல நன்மைகளை தரக்கூடியது.

மூலப்பொருள்

துவரம் பருப்பு – 100 கிராம்
புளி – எலுமிச்சை அளவு
தக்காளி – 1
பச்சை மிளகாய் – 1
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
பூண்டு – 5 பல்
பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
கருவேப்பில்லை – சிறிது
பச்சை கொத்தமல்லி – சிறிது
கடுகு – 1 தேக்கரண்டி
வெந்தயம் – 1 தேக்கரண்டி
எண்ணெய் – தேவையான அளவு
ரசப்பொடி – 2 தேக்கரண்டி
தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை

புளியை தண்ணீரில் போட்டு அரைமணி நேரம் ஊறவைக்கவும். துவரம் பருப்பை நன்றாக கழுவி குக்கரில் வைத்து வேகவைக்கவும். புளியை நன்றாக சாறு வரும் வரையில் நன்றாக கரைத்து ஒரு பாத்திரத்தில் வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.

பருப்பு நன்றாக வெந்தவுடன் புளி தண்ணீர் வைத்திருக்கும் பாத்திரத்தில் போடவும். தக்காளி மற்றும் பச்சை மிளகாயை நல்ல பொடியாக அரிந்து வைத்துக் கொள்ளவும். சிறிய உரலில் அல்லது கல்லால் பூண்டை நன்றாக நசுக்கி வைத்துக் கொள்ளவும்.

அரிந்த தக்காளி, பச்சை மிளகாய், நசுக்கிய பூண்டோடு உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், ரசப்பொடி போட்டு நன்றாக கலக்கவும். பிறகு தாளிக்கும் கரண்டியில் எண்ணையை ஊற்றி, கடுகு மற்றும் வெந்தயத்தையும் போட்டு நன்றாக தாளித்து அந்த பாத்திரத்தில் போடவும்.

இறுதியாக ரசகலவை கொண்ட பாத்திரத்தை அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும். ஒரு கொதியில் நல்ல நுரையாக எழும்பி வரும்போது சிறிது தண்ணீர் ஊற்றி அடுப்பை அணைத்து விட்டு பாத்திரத்தை இறக்கிவைக்கவும்.

இந்த சுவையான மணமான ரசத்தை சுட சுட சாதத்தில் போட்டு அப்பளம் அல்லது வற்றல் அல்லது அசைவ பிரியர்கள் முட்டை அல்லது கருவாடு வறுத்து சாப்பிடலாம்.

குறிப்பு : இந்த ரசம் 4 நபர்கள் தாராளமாக சாதத்தில் ஊற்றி சாப்பிடலாம் இல்லை டம்ளரில் ஊற்றியும் குடிக்கலாம்.

பின்னூட்டமொன்றை இடுக