குறுந்தகவல்
உருண்டை குழம்பு மூன்று முக்கியமான பொருட்கள் (துவரம் பருப்பு, வெங்காயம் மற்றும் பூண்டு) மூலம் செய்யப்படுகிறது. இந்த மூன்றுமே உடல் ஆரோக்கியம் குடுக்க சிறந்த மருத்துவ குணங்களை கொண்டது. ஆதலால் அடிக்கடி இந்த குழம்பை செய்து சாப்பிடுவதால் உடலுக்கு நன்மை தரும். துவரம் பருப்பு நம் உடலில் ரத்த அழுத்தம் குறைய, காயங்கள் ஆற, ரத்த சோகை ஏற்படாமல் இருக்க உதவுகிறது, வெங்காயம் அதிலும் சிறிய வெங்காயம் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் மற்றும் பூண்டு வாய்வை போக்கும். இது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டும் என்றாலும் சாப்பிடலாம்.
மூலப்பொருள்
துவரம் பருப்பு – 1/4 கிலோ
பெரிய வெங்காயம் அல்லது சாம்பார் வெங்காயம் – 1/2 கிலோ
தக்காளி – 1
புளி – பெரிய எலுமிச்சை அளவு
பூண்டு – 2 (முழு பூண்டு)
குழம்பு மிளகாய் தூள் – 3 1/2 தேக்கரண்டி
தேங்காய் – 1/2 மூடி
கருவேப்பில்லை – சிறிது
பச்சை கொத்தமல்லி – சிறிது
சோம்பு \ பெருஞ்சீரகம் – 2 தேக்கரண்டி
கிராம்பு – 5
பட்டை – 2
எண்ணெய் – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை
துவரம் பருப்பை தண்ணீரில் போட்டு 3 மணி நேரம் ஊறவைக்கவும். புளியை தண்ணீரில் போட்டு அரைமணி நேரம் ஊறவைக்கவும். வெங்காயம், தக்காளி மற்றும் பூண்டையும் நல்ல பொடியாக நறுக்கி தனி தனி பாத்திரத்தில் வைத்துக் கொள்ளவும். தேங்காய் மூடியை துருவி வைத்துக் கொள்ளவும்.
ஊறவைத்த துவரம் பருப்பை நன்றாக கழுவிய பிறகு ஒரு சொட்டு தண்ணீர் இல்லாதவாறு வடிகட்டி வைத்துக் கொள்ளவும். கழுவிய துவரம் பருப்புடன் சிறிது உப்பு மற்றும் 1 தேக்கரண்டி சோம்புவையும் சேர்த்து கிரைண்டர் அல்லது மிக்ஸியில் போட்டு கரகர என்று மசால் வடைக்கு அரைப்பதுபோல் அரைத்து ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ளவும்.
வெங்காயம் மற்றும் பூண்டில் இருந்து சிறிதளவு குழம்புக்கு எடுத்து தனியாக எடுத்து வைத்துவிட்டு பிறகு மீதியை அரைத்து வைத்திருக்கும் பருப்பு பாத்திரத்தில் போடவும். கருவேப்பிலை, கொத்தமல்லி, 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள் மற்றும் துருவி வைத்திருக்கும் தேங்காயில் இருந்து சிறிதளவு எடுத்து அந்த மாவு கலவையில் போட்டு நன்றாக பிசைந்து கலக்கவும்.
இட்லி பானையில் இட்லியை வேகவைப்பது போல் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைக்கவும். பிறகு கலந்து வைத்துள்ள மாவை எலுமிச்சை அளவு உருண்டையாக தலா 4 அல்லது 5 என்கிற கணக்கில் இட்லி குழியில் வைக்கவும். ஒரு சமயத்தில் இட்லி பானையில் ஒரு தட்டு மட்டுமே வைத்து வேகவைக்கவும். அப்பொழுது தான் உருண்டை நசுங்காமல் முழுசாக வேகும் மற்றும் பரிமாறவும் சரியாக இருக்கும்.
உருண்டைகள் வேகுவதற்கு குறைந்த பட்சம் 15 முதல் 20 நிமிடங்கள் ஆகும். ஒவ்வொரு முறை இட்லி பானையில் தட்டு வைக்கும் முன்னர் போதுமான அளவு பாத்திரத்தில் உள்ளதா என்று சரிபார்த்து பின்னர் வைக்கவும் இல்லை என்றால் உருண்டை சரியாக வேகமாலும் தீய்ந்து போகும். வேகவைத்த உருண்டையை வெறுமனே சாப்பிடலாம்.
தேங்காய் மற்றும் 1 தேக்கரண்டி சோம்பு போட்டு நல்ல மையாக அரைத்து வைத்துக் கொள்ளவும். ஊறவைத்த புளியை குழம்பு வைக்கும் பாத்திரத்தில் நன்றாக கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும். குழம்பு பத்திரத்தில் தேவையான தண்ணீர், உப்பு, மிளகாய் தூள், தனியாக வைத்து உள்ள வெங்காயம் மற்றும் பூண்டு, தக்காளி போட்டு நன்றாக கலக்கவும். இந்த குழம்பு பாத்திரத்தை அடுப்பில் வைக்கவும்.
நன்றாக கொதிக்கும்பொழுது அரைத்து வைத்திருக்கும் தேங்காயை போட்டு கலக்கவும். பிறகு தாளிக்கும் கரண்டியில் எண்ணையை ஊற்றி, சோம்பு, பட்டை மற்றும் கிராம்பு போட்டு நன்றாக தாளித்து அந்த பாத்திரத்தில் போடவும். இறுதியாக கருவேப்பிலை, கொத்தமல்லி, வேகவைத்த உருண்டையை தேவையான அளவு எடுத்து போட்டவுடன் அடுப்பை அணைத்து விட்டு பாத்திரத்தை இறக்கிவைக்கவும்.
இந்த குழம்புக்கு தனியாக துணை உணவு என்று தேவையில்லை ஏனெனில் வேகவைத்த உருண்டை மற்றும் குழம்பில் போட்ட உருண்டையையே சாப்பிடலாம். அதுவும் குழம்பில் போட்ட உருண்டை காரம் எல்லாம் சேர்ந்து இன்னும் சுவையாக இருக்கும்.
குழம்பில் உள்ள உருண்டை தீர்ந்துவிட்டால், குழம்பு ஒரு கொதி வந்தவுடன் தனியாக வைத்துள்ள வேகவைத்த உருண்டையை தேவையான அளவு எடுத்து குழம்பில் போட்டவுடன் அடுப்பை அணைத்து விட்டு பாத்திரத்தை இறக்கிவைக்கவும்.
சுட சுட சாதத்தில் இந்த குழம்பை ஊற்றி சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். சாப்பிடுபவர் இன்னும் கூடவே சாதம் போட்டு குழம்பு ஊற்றி சாப்பிடுவர்.
குறிப்பு
இந்த குழம்பு 2 அல்லது 3 நாட்களுக்கு பிரிட்ஜ்ல் வைத்து சாப்பிடலாம். உருண்டை கலவையில் சிறிதளவு முருங்கை கீரையை சேர்த்தால் இன்னும் சுவையும் ஆரோகியத்தையும் தரவல்லது.


பின்னூட்டமொன்றை இடுக