ஆட்டு கறி வறுவல்

குறுந்தகவல்

ஒருவரின் உடம்பின் சூட்டை தணிப்பதற்கு ஆட்டு கறி சிறந்த உணவாகும். ஆட்டு கறி மிகவும் மென்மையாகவும் மிருதுவாகவும் இருப்பதனால் எந்த வயதினரும் சாப்பிடுலாம். ஆட்டு கறி சாப்பிடுவதால் உடம்பின் சூட்டைத்தணித்து தோலிற்கு வலிமையும் சருமத்துக்கு பொலிவும் தரும். ஆட்டு கறி வறுவலில் இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்திருப்பதால் உடம்பில் இன்னும் அதிக வலிமையை தரும்.

மூலப்பொருள்

கறி – 1/4 கிலோ
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
இஞ்சி  – சிறியதுண்டு
பூண்டு பல் – 8
மிளகு – 1 தேக்கரண்டி
சீரகம் – 1/2 தேக்கரண்டி
சோம்பு – 1 தேக்கரண்டி
பட்டை – 2 சிறியதுண்டு
கிராம்பு – 4
தேங்காய் – 1/4 மூடி
வெங்காயம்  – 2 (மிதமான அளவு)
தக்காளி – 2 (மிதமான அளவு)
குழம்பு மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
மிளகு தூள் – 1 தேக்கரண்டி
எண்ணெய் – 1 மேஜைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
கருவேப்பிலை – தேவையான அளவு
கொத்தமல்லி – தேவையான அளவு

செய்முறை

1. கறியை நன்றாக தண்ணீரில் கழுவி பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் இல்லாமல் பிழிந்து வைக்கவும்.

2. தேங்காயை துருவி வைத்துக்கொள்ளவும்.

3. வெங்காயம், தக்காளி, கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளியை, வேகவைக்க மற்றும் வதக்க என்று இரு பங்காக பிரித்து வைக்கவும்.

4. மிக்ஸியில் மிளகு, சீரகம், இஞ்சி, பூண்டு மற்றும் தண்ணீர் ஊற்றி நல்ல மையாக அரைத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.

5. ஒரு குக்கரில் சுத்தம் செய்து வைத்துள்ள கறி அத்துடன் மஞ்சள் தூள், அரைத்து வைத்துள்ள மசாலா, நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி, கருவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, நன்றாக மூடி அடுப்பில் வைக்கவும். 4 அல்லது 5 விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு இறக்கி வைக்கவும்.

6. மிக்ஸியில் துருவி வைத்துள்ள தேங்காய், சோம்பை போட்டு நன்றாக மையாக அரைத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.

7. எண்ணெய் சட்டியை அடுப்பில் வைக்கவும். பிறகு எண்ணெய்யை ஊற்றி, சோம்பு, பட்டை மற்றும் கிராம்பு போட்டுத் தாளிக்கவும்.

8. தாளித்ததும் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் தக்காளியை போட்டு நன்றாக வதக்கவும். தேவையான அளவு உப்பையும் போட்டு வதக்கவும். அப்பொழுது தான் தக்காளி சீக்கிரம் வெந்துவிடும்.

9. வெங்காயம் மற்றும் தக்காளி நல்ல தொக்கு போல வதங்கியதும், குக்கரில் உள்ள கறி மற்றும் கறி வேகவைத்த தண்ணீருடன் போட்டுக் கிளறவும்.

10. ஒரே நேரத்தில் மொத்தமாக ஊற்றாமல் முதலில் கறிகளை எடுத்து எண்ணெய் சட்டியில் போட்டுக் கிளறவும் பிறகு கறி வேகவைத்த தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி மெதுவாக கிளறவும்.

11. நன்றாக கொதி வந்தவுடன் அரைத்துவைத்துள்ள தேங்காயை சேர்த்து நன்றாக கிளறவும்.

12. சிறிது நேரத்தில் தண்ணீர் வற்றி கெட்டியாக வரும் சமயத்தில் சிறிது எண்ணெய்யை ஊற்றி நன்றாக வதக்கவும். அப்பொழுதுதான் சுவை தூக்கலாக இருக்கும். அதிகம் காரம் எதிர் பார்ப்பவர்கள் அடுப்பை அணைக்கும் சமயத்தில் தேவையான அளவு மிளகு தூள் போட்டு இரண்டு கிளறி விட்டு இறக்கி வைக்கவும். நாக்கில் எச்சில் ஊற கம கம கறி வறுவல் தயார்.

குறிப்பு : இந்த கறி வறுவலை, சைவ அசைவ குழம்புக்கு அல்லது தோசை, சப்பாத்தி போன்ற சிற்றுண்டிக்கும் தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும். மற்றும் உணவின் ருசி நாக்கை விட்டும் மனதை விட்டும் அகலாது.

To view Recipe in English Click here

“ஆட்டு கறி வறுவல்” மீது ஒரு மறுமொழி

How to Prepare Delicious Mutton Fry | அறிவோம் சுவையான சமையல் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி