குறுந்தகவல்
கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பது போல் வாழைத்தண்டு சாப்பிட்டால் சிறுநீரகத்தில் இருக்கும் கல் எந்த வலியும் இல்லாமல் சிறுநீர் வழியாக வெளியே வந்துவிடும். வாழைத்தண்டை வெறும் வயிற்றில் சாறாக பிழிந்து குடித்தால் உடம்பில் உள்ள அணைத்து கழிவுகளும் சிறுநீராக வெளியே வந்துவிடும். பொரியலாக செய்தும் சாப்பிடலாம். வாழைத்தண்டு சாப்பிடுவதால் ரத்த அழுத்தத்தை குறைக்கவும், ரத்த சோவையை போக்கவும் மற்றும் வயிற்று கொழுப்பை குறைக்க சிறந்த மருந்தாக விளங்குகிறது.
மூலப்பொருள்
வாழைத்தண்டு – 1அடி அளவு
வெங்காயம் – 1 (பெரியது)
தேங்காய் – 1/4 மூடி
கடுகு – 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
பச்சை மிளகாய் – 2
எண்ணெய் – 2 மேஜைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
கருவேப்பிலை – தேவையான அளவு
செய்முறை
வாழைத்தண்டின் மேல் உள்ள மட்டையை அகற்றவும். தண்ணீரில் நன்றாக கழுவவும். பிறகு வாழைத்தண்டை ஒரு பாத்திரத்தில் வட்ட வட்டமாக வெட்டி வைக்கவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி பின்பு வட்ட வட்டமாக வெட்டிய துண்டுகளை மேலும் 4 அல்லது 5 துண்டுகளாக வெட்டி பிறகு பொடி பொடியாக அரிந்து போட்டுக்கொள்ளவும். நன்றாக பிசைந்து கழுவவும். அப்படி கழுவும் போது வாழைத்தண்டின் நார் தனியாக பிரிந்து வரும், பின்பு அதை எடுத்து வெளியே போடவும்.
நன்றாக கழுவிய பிறகு ஒரு பாத்திரத்தில் வாழைத்தண்டை பிழிந்து போடவும். பின்பு அதில் சிறிது உப்பு போட்டு நன்றாக பிசறி விடவும். இதை 10 நிமிடம் தனியே வைக்கவும். வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடிப் பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். தேங்காய்யை துருவி வைத்துக்கொள்ளவும். எண்ணெய் சட்டியை அடுப்பில் வைக்கவும். பிறகு எண்ணெய்யை ஊற்றி கடுகு மற்றும் உளுந்தை போட்டுத் தாளிக்கவும். நன்றாக தாளித்தவுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கருவேப்பிலை போட்டு நன்றாக வதக்கவும்.
நன்றாக வதங்கியதும் பாத்திரத்தில் வைத்துள்ள வாழைத்தண்டை போட்டு வதக்கவும். வாழைத்தண்டில் உப்பைக் கலந்து ஊற வைத்துள்ளதால் மறுபடியும் உப்பை போட வேண்டிய அவசியமில்லை. உப்பை கூட சாப்பிடுபவர்கள் ருசித்து பார்த்து தேவையான அளவு உப்பை போட்டு நன்றாக கலக்கவும். நன்றாக கலந்த பிறகு எண்ணெய்ச்சட்டியை தட்டு வைத்து மூடவும்.
வாழைத்தண்டில் தண்ணீர் இருப்பதால் அதிலே நன்றாக வேகும் ஆதலால் தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியமில்லை. அடுப்பை மிதமான சூட்டில் வேகவைக்கவும். பிறகு சிறிது மஞ்சள் தூள் போட்டு நன்றாக கிளறி விடவும். நன்றாக வேகும் வரை அவ்வப்பொழுது கிளறி விட்டு தட்டை வைத்து மூடவும். நன்கு வெந்தவுடன் தேங்காய் துருவலை அதில் தூவி, நன்றாக கிளறி விட்டு அடுப்பை அணைத்து விட்டு இறக்கி வைக்கவும். இந்த பொரியலை வெறுமனே சாப்பிடலாம் அல்லது சாம்பார் மற்றும் ரசத்துக்கு தொட்டு சாப்பிடலாம்.
குறிப்பு : இந்த பொரியலை அனைவரும் சாப்பிடலாம். இது உடம்புக்கு நல்ல ஆரோக்கியத்தை தரும். வெயில் காலத்தில் சூட்டின் காரணமாக சிறுநீர் கழிப்பது சிரமமாக இருக்கும் அப்பொழுது இந்த பொரியலை சாப்பிட்டால் சூட்டை தனித்து சிறுநீர் எந்த ஒரு சிரமமும் இன்றி சீராக போகும். இந்த பொரியலை வெறுமனே அல்லது சைவ குழம்புக்கு தொட்டு சாப்பிட மிக சுவையாக இருக்கும் .


பின்னூட்டமொன்றை இடுக