குறுந்தகவல்
பரோட்டா என்றாலே யாராக இருந்தாலும் சுவைத்து சாப்பிட அதுவும் சால்னாவுடன் சாப்பிட அதிகம் விரும்புவர். முட்டை உடல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை செய்ய கூடியது. பரோட்டாவுடன் முட்டை சேர்த்து சாப்பிட இன்னும் சுவையாகவும் மற்றும் மென்மையாகவும் இருக்கும். இந்த முட்டை பரோட்டா ஒரு மாறுதலுக்காக இரவு உணவாக சாப்பிடலாம்.
மூலப்பொருள்
பரோட்டா – 5
வெங்காயம் – 3 (பெரியது)
தக்காளி – 3
குழம்பு மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 1
முட்டை – 4
எண்ணெய் – 1 மேஜைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
செய்முறை
பரோட்டா செய்ய தெரிந்தவர்கள் செய்து வைத்துக் கொள்ளவும். செய்ய தெரியாதவர்கள் கடைகளில் சமைக்காத பரோட்டா பாக்கெட்டில் விற்கும் அதை வாங்கி தோசை கல்லில் போட்டு நல்ல மொறு மொறு என்று சுட்டு வைத்துக் கொள்ளவும் அல்லது பரோட்டா கடையில் வாங்கிக் கொள்ளவும். வெங்காயத்தை நல்ல பொடியாக நறுக்கிக்கொள்ளவும் . தக்காளியை நல்ல பொடியாக நறுக்கிக்கொள்ளவும் அப்பொழுதுதான் வெகு விரைவில் தக்காளி வதங்கும். பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிவைக்கவும். ( காரம் அதிகம் விரும்புவோர் பச்சை மிளகாய் சேர்க்கலாம் அல்லது தவிர்க்கலாம்.)
பரோட்டாவை சிறிய சிறிய துண்டுகளாக பிய்த்து வைத்துக்கொள்ளவும். பிறகு எண்ணெய் சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய்யை ஊற்றவும். நறுக்கி வைத்து உள்ள வெங்காயத்தை போட்டு நல்ல பொன்னிறமாக வதக்கவும். பிறகு தக்காளி மற்றும் உப்பை போட்டு வதக்கவும். நன்றாக வதங்க சிறிது தண்ணீர் ஊற்றி வேக விடவும். நன்றாக வதங்கியதும் மிளகாய் தூள் மற்றும் பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
நன்றாக கிளறிவிட்டதும் 4 முட்டையை ஒவ்வொன்றாக உடைத்து போடவும். சிறிது எண்ணெய்யை ஊற்றில் நல்ல உதிரியாக வரும் வரை நன்றாக கிளறிவிடவும். சிறிது நேரத்தில் சட்டியில் ஒட்டாமல் நல்ல உதிரியாக வரும். பிறகு பிய்த்து வைத்துள்ள பரோட்டாவை போட்டு நிதானமாக வதக்கவும். பரோட்டா நன்றாக முட்டை கலவையுடன் கலந்ததும் அடுப்பை அணைத்து விட்டு எண்ணெய் சட்டியை இறக்கிவிடவும். சூடு ஆறுவதற்குள் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.
குறிப்பு : இந்த முட்டை பரோட்டாவை மாதத்திற்கு ஒரு முறை அல்லது என்றாவது ஒரு நாள் ஒரு மாறுதலுக்காக சாப்பிடலாம். இது அளவோடு சாப்பிட சுவையாக மற்றும் ஆரோக்கியமாக இருக்கும்.


பின்னூட்டமொன்றை இடுக