புதினா சட்னி

புதினா சட்னி

குறுந்தகவல்

புதினா நல்ல மணமாகவும் சிறந்த மருந்தாகவும் விளங்குகிறது. புதினா ஆஸ்துமா நோய் தவிர்க்க, வயிற்றுப்போக்கு குணமாக, சுவாச கோளாறுகள் போக என்று பல வகையில் சிறந்த மருந்தாக உதவுகிறது. இந்த புதினா சட்னி கொர கொரவென்று அரைப்பதால் சாப்பிடுவதற்கு மிக சுவையாக இருக்கும்.

மூலப்பொருள்

புதினா – 1 கட்டு
கடுகு – 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 2 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை
புளி – ஒரு எலுமிச்சை அளவு
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – ஒரு சிறிய துண்டு
நல்லெண்ணெய் – 2 மேஜைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

செய்முறை

புதினா கட்டை பிரித்து இலைகளை கிள்ளி நன்றாக கழுவி சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் வைத்துக்கொள்ளவும். ஒரு எண்ணெய் சட்டியில் நல்லெண்ணெய்யை ஊற்றி அதில் உளுத்தம் பருப்பை போட்டு தாளிக்கவும். தாளித்தபின் புளி, பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு, புதினா இலையை போட்டு நன்றாக தாளிக்கவும். நன்கு வதங்கியதும் அடுப்பை அணைத்து விட்டு மிதமான காற்றில் ஆறவிடவும்.

நன்கு ஆறிய பின் ஒரு ஜாரில் வதக்கி வைத்துள்ளதை போட்டு அரைக்கவும். கொஞ்சம் கொர கொர என்று அரைத்தால் சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும். அரைத்த பின் ஒரு பாத்திரத்தில் ஜாரில் இருப்பதை வழித்துப் போடவும். பிறகு தாளிக்கும் கரண்டியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய்யை ஊற்றி அதில் கடுகு போட்டு தாளித்து சட்னி பாத்திரத்தில் கொட்டவும்.

குறிப்பு : மருத்துவம் குணம் நிறைந்த இந்த புதினாவை நல்லெண்ணெயில் செய்வதால் மருத்துவ குணம் குறையாமலும் சுவையாகவும் இருக்கும். புதினா சட்னி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவர்க்கும் புடிக்கும். இந்த சட்னி இட்லி மற்றும் தோசையில் தொட்டு சாப்பிட்டால் மிக சுவையாக இருக்கும்.

பின்னூட்டமொன்றை இடுக