உருளைக் கிழங்கு வறுவல் – I

உருளைக் கிழங்கு வறுவல்

குறுந்தகவல்

உருளை கிழங்கு என்றாலே பலருக்கு நினைவுக்கு வருவது வாய்வுத் தொல்லை. ஆனால் இதில் சிறந்த மருத்துவ குணமும் உள்ளது. இதில் மூளை சரியாக செயல்பாடு செய்ய, முகம் பொலிவு பெற மற்றும் பல நன்மைகள் உள்ளது. எதுவுமே அளவோடு சாப்பிட்டால் உணவில் சிறந்த மருத்துவ குணங்கள் செயல்பட்டு நாம் ஆரோக்கியமாக இருக்க உதவும். அதுபோல் உருளை கிழங்கையும் அளவோடு சாப்பிட்டால் வாய்வு தொல்லை இல்லாமல் அதில் உள்ள மருத்துவ குணங்கள் நம் உடம்பில் சார்ந்து நல்ல பலனைத் தரும். உருளை கிழங்குடன் வெங்காயம், தக்காளி சேர்ப்பதால் உண்ண சுவையாகவும் ஆரோக்கியத்தையும் கொடுக்கும்.

மூலப்பொருள்

உருளைக்கிழங்கு – 1/4 கிலோ
பெரிய வெங்காயம் – 3
தக்காளி – 2
குழம்பு மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
எண்ணெய் – 2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

செய்முறை

உருளைக் கிழங்கை நன்றாக கழுவி குக்கரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். பின்பு வெங்காயம் மற்றும் தக்காளியை பொடிப் பொடியாக அரிந்து வைத்துக்கொள்ளவும். உருளைக்கிழங்கு வெந்தவுடன் குக்கரின் விசிலை மெதுவாக எடுத்து தனியே வைத்து விட்டு பிறகு மெதுவாக குக்கரின் மூடியை திறக்கவும்.

உருளைக்கிழங்கு மிகவும் சூடாக இருக்கும் அதனால் குக்கரில் உள்ள தண்ணீரை கீழே ஊற்றி விடவும் (மறுபடியும் தண்ணீர் ஊற்றினால் உருளைக்ககிழங்கு இறுகிவிடும் மற்றும் சுவையாக இருக்காது). வேகவைத்த உருளைக்கிழங்கின் தோலை உரித்த பிறகு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

ஒரு எண்ணெய் சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய்யை ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் சீரகம் போட்டு தாளிக்கவும். நன்றாக தாளித்தவுடன் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வரும் வரையில் வதக்கவேண்டும் அப்பொழுதுதான் வெங்காயத்தின் பச்சை மனம் போகும். வெங்காயம் நல்ல பொன்னிறமாக வதங்கியதும் தக்காளி மற்றும் உப்பு போட்டு நன்றாக வதக்கவும்.

நன்கு வதங்கிய பிறகு உருளைக்கிழங்கு மற்றும் மிளகாய்த்தூள் போட்டு நன்றாக கிளறவேண்டும். பிறகு எண்ணெய்யை விட்டு மீண்டும் நன்றாக உருளைக்கிழங்கை நன்றாக மசித்து கிளறவேண்டும். நல்ல மொறு மொறு வரும் அளவுக்கு நிதானமாக பிரட்டி பிரட்டி வைக்கவும். தேவையென்றால் மீண்டும் எண்ணெய்யை விட்டு பிரட்டி விடவும். நல்ல மொறு மொறு என்று வந்தவுடன் அடுப்பை அணைத்து விட்டு இறக்கி விடவும்.

இந்த உருளைக்கிழங்கை சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடலாம் அல்லது சாம்பார், ரசம், பருப்பு கடைதல் ஆகிய வற்றுடன் சேர்த்து சாப்பிடலாம். தோசை, பூரி மற்றும் சப்பாத்திக்கும் தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும்.

குறிப்பு : உருளை கிழங்கு வறுவல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய உணவாகும். உருளை கிழங்கு குறைவாக இருந்தால் வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்தால் உருளைக்கிழங்கு வறுவல் கூடுதலாக இருக்கும்.

பின்னூட்டமொன்றை இடுக