பட்டாணி, உருளைக் கிழங்கு குருமா

குறுந்தகவல்

குருமா என்றாலே அனைவராலும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு குழம்பு. இந்த குருமா சாதத்தில் கலந்து அல்லது இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி என்று தொட்டு சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். இதில் பட்டாணி மற்றும் உருளை கிழங்கு போட்டு குருமா செய்தால் இன்னும் சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். குருமாவில் உள்ள மசாலாவே சிறந்த மருத்துவம் உள்ளது. அதோடு பட்டாணி சேர்த்தால் எலும்பை பலமாகவும், புற்று நோய் தவிர்க்க என்று பலவிதத்தில் உடல் ஆரோகியத்துக்கு உதவியாக உள்ளது. உருளை கிழங்கு என்றாலே வாய்வு பிரச்சனை தான் நினைவுக்கு வரும். எதையும் அளவோடு சாப்பிட்டால் ஆரோக்கியம் என்பதுபோல் உருளை கிழங்கும் அளவோடு சாப்பிட்டால் உடல் எடை கூட, சிறுநீரக கரைய என்று பல நற்பலனை தர வல்லது.

மூலப்பொருள்

காய்ந்த பட்டாணி – 200 கிராம்
வெங்காயம் – 2 பெரியது
இஞ்சி – சிறிய துண்டு
எலுமிச்சை பழம் – 1
பூண்டு – 8 பல்
மிளகு – 25 கிராம்
தேங்காய் – 1/2 மூடி
கருவேப்பில்லை – சிறிது
பச்சை கொத்தமல்லி – சிறிது
பச்சை மிளகாய் – 4
தனியா தூள் – 2 மேஜைக்கரண்டி
சோம்பு \ பெருஞ்சீரகம் – 2 தேக்கரண்டி
கசகசா – 1 தேக்கரண்டி
பொட்டுக்கடலை \ உடைச்சக்கடலை – 25 கிராம்
கிராம்பு – 4
பட்டை – 2
எண்ணெய் – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை

காய்ந்த பட்டாணியை முதல் நாள் இரவில் ஊறவைக்கவும். மறுநாள் காலை பட்டாணியை நன்றாக தண்ணீர் ஊற்றி கழுவிய பிறகு குக்கரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து வேகவைக்கவும். உருளை கிழங்கு நன்றாக கழுவி இன்னொரு குக்கரில் அல்லது ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து வேகவைக்கவும்.

வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் பூண்டை நல்ல பொடிப் பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். தேங்காயை துருவி வைத்துக்கொள்ளவும். எண்ணெய் சட்டியை அடுப்பில் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி பிறகு பச்சை மிளகாய், மிளகு, இஞ்சி மற்றும் பூண்டை போட்டு லேசாக வதக்கி ஒரு பாத்திரத்தில் வைத்துக்கொள்ளவும். அதே எண்ணெய் சட்டியில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் துருவிய தேங்காய், சோம்பு, பொட்டுக்கடலை, கசகசா மற்றும் வெங்காயத்தை (குழம்புக்கு ஒரு வெங்காயத்தை எடுத்து தனியாக வைக்கவும்.) போட்டு லேசாக வதக்கி ஒரு பாத்திரத்தில் வைத்துக்கொள்ளவும். பிறகு அடுப்பை அணைத்து விட்டு எண்ணெய் சட்டியை மேலே படாதவாறு ஓரமாக வைக்கவும்.

மிக்ஸியில் சிறிய ஜாரில் வதக்கி வைத்துள்ள பச்சை மிளகாய், மிளகு, இஞ்சி மற்றும் பூண்டை போட்டு மையாக அரைத்து வைத்துக்கொள்ளவும். பெரிய ஜாரில் (ஒரு ஜார்தான் இருக்கிறது என்றால் அரைத்த கலவையை ஒரு பாத்திரத்தில் போட்டு விட்டு அதே ஜாரை உபயோகிக்கலாம். கழுவ தேவையில்லை). வதக்கி வைத்துள்ள தேங்காய், சோம்பு, கசகசா, பொட்டுக்கடலை மற்றும் வெங்காயம் போட்டு மையாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.

குழம்பு வைக்கும் பாத்திரத்தில் சிறிய ஜாரில் அரைத்து வைத்துள்ள பச்சை மிளகாய், மிளகு, பூண்டு மற்றும் இஞ்சி கலவையை கொட்டவும். பிறகு குழம்பு வைக்கும் பாத்திரத்தின் கால் பங்கு அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கலக்கி அடுப்பில் வைக்கவும். அதன் பின் உப்பு மற்றும் தனியா தூள் போட்டு நன்றாக கலக்கவும். ஒரு கொதி கொதிக்கும் பொழுது தனியாக வைத்துள்ள வெங்காயத்தை போடவும்.

நன்கு கொதித்தவுடன் பெரிய ஜாரில் உள்ள அரைத்து வைத்துள்ள தேங்காய், சோம்பு, கசகசா, பொட்டுக்கடலை மற்றும் வெங்காயம் கலவையை போடவும். உடைத்தக்கடலை போட்டிருப்பதால் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அடிக்கடி குழம்பை கிண்டிவிடவும். வேகவைத்த உருளையை துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். நன்கு கொதித்தவுடன் வேகவைத்த பட்டாணி மற்றும் உருளையை குழம்பில் போடவும். பிறகு எலுமிச்சத்தை நன்றாக பிழிந்து குழம்பில் விடவும்.

தாளிக்கும் கரண்டியில் சிறிது எண்ணெய் ஊற்றி சோம்பு, பட்டை, கிராம்பு போட்டு தாளித்து குழம்பில் போடவும். இறுதியாக கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி போட்டு ஒரு கிண்டு கிண்டி விட்டு அடுப்பை அணைத்துவிட்டு இறக்கி வைக்கவும். கம கம என்று வாசனையுடன் பட்டாணி உருளை கிழங்கு குருமா தயார்.

சுட சுட சாதத்தில் இந்த குழம்பை ஊற்றி சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். அதுவும் இட்லி, தோசை, சப்பாத்தி மற்றும் பூரிக்கு தொட்டு சாப்பிட்டால் மிக சுவையாக இருக்கும்.

குறிப்பு

இந்த குழம்பு ஊற்றி சாப்பிடுவோர் கூடவே சாப்பிடுவர் மற்றும் பட்டாணி சாப்பிடாதோர் கூட இந்த குருமாவோடு அதையும் சாப்பிடுவர்.

பின்னூட்டமொன்றை இடுக