குறுந்தகவல்
பயத்தம் பருப்பை பொதுவாக சருமம் மிளிர அதிகம் பயன்படுத்துவர். ஆனால் இது உடலுக்கும் நற்பலன்களை கொடுக்கவல்லது. இதில் உள்ள புரத மற்றும் நார் சத்து உடல் எடையும் கொழுப்பையும் குறைக்கவல்லது. நாம் பயத்தம் பருப்பில் சாம்பார் வைப்பதால் இத்துடன் மற்ற பொருள்களில் உள்ள மருத்துவ குணங்களும் இணைந்து சிறந்த பலனை தரவல்லது. வெங்காயம் அதிலும் சிறிய வெங்காயம் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் மற்றும் புளி கிருமி நாசினியாக செயல்படுகிறது.
மூலப்பொருள்
பயத்தம் பருப்பு – 200 கிராம்
புளி – எலுமிச்சை அளவு
சிறிய வெங்காயம் – 10 (பெரிய வெங்காயம் – 2 நடுத்தர அளவு)
தக்காளி – 1
பச்சை மிளகாய் – 4
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை (பெருங்காயம் கட்டி – சிறியது)
கடுகு – 1 தேக்கரண்டி
வெந்தயம் – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
எண்ணெய் – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
கருவேப்பில்லை – சிறிது
பச்சை கொத்தமல்லி – சிறிது
செய்முறை
பயத்தம் பருப்பை நன்றாக கழுவி வைத்துக்கொள்ளவும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகிய மூன்றையும் நல்ல பொடிப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். புளியை தண்ணீரில் போட்டு அரைமணி நேரம் ஊறவைக்கவும். குக்கரில் கழுவிய பயத்தம் பருப்பு மற்றும் தண்ணீரை ஊற்றி வேகவைக்கவும். பருப்பு வெந்தவுடன் ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும்.
ஒரு எண்ணெய் சட்டியில் சிறிது எண்ணெய் ஊற்றி பிறகு நறுக்கிய வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாயை போட்டு நன்றாக வதக்கி வைக்கவும்.
சாம்பார் வைக்கும் பாத்திரத்தில் புளியை நன்றாக சாறு வரும் வரையில் நன்றாக கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும். பிறகு அந்த பாத்திரத்தில் உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் போட்டு நன்றாக கலக்கி அடுப்பில் வைக்கவும். நன்கு கொதித்த பின் வேகவைத்துள்ள பயத்தம் பருப்பை அதில் போடவும்.
தண்ணீர் வேண்டும் என்றால் சாம்பார் கலவை பாத்திரத்தில் தேவைக்கு ஏற்ப ஊற்றிக் கொள்ளலாம். இதில் கருவேப்பிலை, பச்சை கொத்தமல்லியை போடவும். அடி பிடிக்காமல் இருக்க இடை இடையே அடுப்பில் வைத்திருக்கும் சாம்பாரை மெதுவாக கிண்டி விடவும்.
சாம்பார் நன்றாக கொதித்தவுடன் தாளிக்கும் கரண்டியில் எண்ணையை விட்டு கடுகு, வெந்தயம், சீரகம் போட்டு நன்றாக தாளித்து அந்த பாத்திரத்தில் போடவும். நன்றாக கொதித்தவுடன் அடுப்பை அணைத்து விட்டு பாத்திரத்தை இறக்கிவைக்கவும். இந்த சாம்பார் சிறிது தண்ணீராகத்தான் இருக்கும்.
இந்த சுவையான சாம்பாரை சுட சுட சாதத்தில் போட்டு , நெய் விட்டு அப்பளம், வற்றல், பொரியல், வறுவல் என்று எதாவது சேர்த்து சாப்பிடலாம். அசைவ பிரியர்கள் முட்டை, கருவாடு வறுத்து, மீன் வறுவல் என்று ஏதாவது சேர்த்து சாப்பிடலாம்.
குறிப்பு
இந்த சாம்பார் 4 நபர்கள் தாராளமாக சாதத்தில் ஊற்றி சாப்பிடலாம்.


பின்னூட்டமொன்றை இடுக