வேப்பம் பூ ரசம்

Veppam Poo Rasam

குறுந்தகவல்

செரிமானம், சளி, காய்ச்சல் என்றாலே நினைவுக்கு வருவது ரசம். இன்னும் சிலர் எந்த வகையான குழம்பாக இருந்தாலும் ரசம் சாப்பிடுவது ஒரு வழக்கமாகவே வைத்து இருப்பர். அதேபோல் விஷத்தன்மையை முறிப்பது, அம்மை, வயிற்றுப் புழு அழிக்க என்றாலே அது வேம்பு. வேப்பிலை அதிக கசப்புத்தன்மை உள்ளதால் அதை யாரும் சாப்பிட தயங்குவர். ஆனால் வேப்பம் பூ அவ்வளவு கசப்பாக இருக்காது. அதனால் ரசத்தில் சிறிது வேப்பம் பூ சேர்த்து செய்தால் யாராக இருந்தாலும் தயக்கமின்றி சாப்பிடுவர். ரசத்துடன் வேப்பம் பூ சேர்ப்பதால் இரண்டில் உள்ள மருத்துவ குணங்கள் ஒன்று இணைந்து சிறந்த பலனைத் தரவல்லது.

மூலப்பொருள்

வேப்பம் பூ – 1 மேஜைக்கரண்டி
புளி – எலுமிச்சை அளவு
தக்காளி – 1
பச்சை மிளகாய் – 1
பூண்டு – 5 பல்
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை
கருவேப்பில்லை – சிறிது
பச்சை கொத்தமல்லி – சிறிது
கடுகு – 1 தேக்கரண்டி
வெந்தயம் – 1 தேக்கரண்டி
எண்ணெய் – தேவையான அளவு
ரசப்பொடி – 2 தேக்கரண்டி
தண்ணீர் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை

புளியை தண்ணீரில் போட்டு அரைமணி நேரம் ஊறவைக்கவும். புளியை நன்றாக சாறு வரும் வரையில் நன்றாக கரைத்து ரசம் தயாரிக்கும் பாத்திரத்தில் வடிகட்டி வைத்துக் கொள்ளவும். தக்காளி மற்றும் பச்சை மிளகாயை நல்ல பொடியாக அரிந்து வைத்துக் கொள்ளவும். சிறிய உரலில் அல்லது கல்லால் பூண்டை நன்றாக நசுக்கி வைத்துக் கொள்ளவும்.

புளி தண்ணீர் உள்ள பாத்திரத்தில் அறிந்த தக்காளி, பச்சை மிளகாய், நசுக்கிய பூண்டு, உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், ரசப்பொடி, கருவேப்பிலை, பச்சை கொத்தமல்லி போட்டு நன்றாக கலக்கவும் அல்லது கையால் நன்றாக பிசைந்துவிடவும். பிறகு தாளிக்கும் கரண்டியில் எண்ணையை ஊற்றி, கடுகு, வெந்தயம் மற்றும் வேப்பம் பூ போட்டு நன்றாக தாளித்து அந்த பாத்திரத்தில் போடவும்.

இறுதியாக ரசகலவை கொண்ட பாத்திரத்தை அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும். ஒரு கொதியில் நல்ல நுரையாக எழும்பி வரும்போது சிறிது தண்ணீர் ஊற்றி அடுப்பை அணைத்து விட்டு பாத்திரத்தை இறக்கிவைக்கவும்.

இந்த சுவையான மணமான ரசத்தை சுட சுட சாதத்தில் போட்டு அப்பளம் அல்லது வற்றல் அல்லது அசைவ பிரியர்கள் முட்டை அல்லது கருவாடு வறுத்து சாப்பிடலாம்.

குறிப்பு :

இந்த ரசம் 4 நபர்கள் தாராளமாக சாதத்தில் ஊற்றி சாப்பிடலாம் இல்லை டம்ளரில் ஊற்றியும் குடிக்கலாம். இந்த ரசம் சாப்பிடுவதால் வயிற்றில் உள்ள பூச்சிகள் அழிந்துவிடும்.

வெய்யில் காலம் அதாவது சித்திரை மற்றும் வைகாசி மாதத்தில் வேப்ப மரத்தில் பூக்கள் நிறைய வரும். அந்த சமயத்தில் பூக்களை பறித்து மிதமான காற்றில் உலரவிட்டு பிறகு காற்று புகாத பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.

வேப்பம் பூ பறிக்க முடியாத உயரத்தில் இருந்தால் அந்த மரத்தின் கீழ் துணியை விரிக்கவும். துணி பறக்காமல் இருக்க கற்களை நான்கு மூலையில் வைக்கவும். காற்றின் வேகத்தில் வேப்பம் பூ தானாகவே விரிக்க பட்ட துணியில் விழும். இப்படி ஒரு நாள் முழுக்க வைத்தால் நிறைய வேப்பம் பூ இருக்கும். அதை மிதமான காற்றில் உலரவிட்டு பிறகு காற்று புகாத பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.

“வேப்பம் பூ ரசம்” அதற்கு 2 மறுமொழிகள்

    1. விருப்பம் தெரிவித்ததற்கு நன்றி

      Like

பின்னூட்டமொன்றை இடுக