மிளகு ரசம்

Milagu Rasam

குறுந்தகவல்

மிளகு ரசம் சளி, காய்ச்சலுக்கு சிறந்த மருந்தாகும். ரசப்பொடியில் உள்ள மிளகு காரம் சளிக்கு மிக சிறந்தது. இதில் தக்காளி சேர்க்காததால் மிளகு காரம் நல்ல தூக்கலாகவே இருக்கும் அதனால் சளிபிடித்தவர்கள் இந்த ரசத்தை ஒரு டம்ளரில் ஊற்றி குடிக்க தொண்டைக்கு இதமாகவும் சளியும் சட்டென்று சரியாகிவிடும்.

மூலப்பொருள்

(ரசப்பொடியில் மிளகு இருப்பதால் தனியாக மிளகு சேர்க்கவேண்டிய அவசியமில்லை)

புளி – எலுமிச்சை அளவு
பச்சை மிளகாய் – 1
பூண்டு – 5 பல்
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை
கருவேப்பில்லை – சிறிது
பச்சை கொத்தமல்லி – சிறிது
கடுகு – 1 தேக்கரண்டி
வெந்தயம் – 1 தேக்கரண்டி
எண்ணெய் – தேவையான அளவு
ரசப்பொடி – 2 தேக்கரண்டி
தண்ணீர் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை

புளியை தண்ணீரில் போட்டு அரைமணி நேரம் ஊறவைக்கவும். புளியை நன்றாக சாறு வரும் வரையில் நன்றாக கரைத்து ரசம் தயாரிக்கும் பாத்திரத்தில் வடிகட்டி வைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயை நல்ல பொடியாக அரிந்து வைத்துக் கொள்ளவும். சிறிய உரலில் அல்லது கல்லால் பூண்டை நன்றாக நசுக்கி வைத்துக் கொள்ளவும்.

புளி தண்ணீர் உள்ள பாத்திரத்தில் அரிந்த பச்சை மிளகாய், நசுக்கிய பூண்டு, உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், ரசப்பொடி, கருவேப்பிலை, பச்சை கொத்தமல்லி போட்டு நன்றாக கலக்கவும் அல்லது கையால் நன்றாக பிசைந்துவிடவும். பிறகு தாளிக்கும் கரண்டியில் எண்ணையை ஊற்றி, கடுகு மற்றும் வெந்தயத்தையும் போட்டு நன்றாக தாளித்து அந்த பாத்திரத்தில் போடவும்.

இறுதியாக ரசகலவை கொண்ட பாத்திரத்தை அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும். ஒரு கொதியில் நல்ல நுரையாக எழும்பி வரும்போது சிறிது தண்ணீர் ஊற்றி அடுப்பை அணைத்து விட்டு பாத்திரத்தை இறக்கிவைக்கவும்.

இந்த சுவையான மணமான ரசத்தை சுட சுட சாதத்தில் போட்டு அப்பளம் அல்லது வற்றல் அல்லது அசைவ பிரியர்கள் முட்டை அல்லது கருவாடு வறுத்து சாப்பிடலாம்.

குறிப்பு

இந்த ரசம் 4 நபர்கள் தாராளமாக சாதத்தில் ஊற்றி சாப்பிடலாம் இல்லை டம்ளரில் ஊற்றியும் குடிக்கலாம்.

பின்னூட்டமொன்றை இடுக