தக்காளி ரசம்

Thakkali Rasam

குறுந்தகவல்

நமது அன்றாட சமையலில் முக்கியமான பொருளாக இருப்பது தக்காளி. தக்காளி சுவைக்காகவும் உடல் ஆரோகியத்துக்கும் பயன்படுத்துகின்றனர். தக்காளி ரசத்தில் புளிக்கு பதிலாக கூடுதலாக தக்காளி பயன்படுத்தப்படுகிறது. தக்காளி கடுமையான வலி நீக்க, கண் பார்வைக்கு, சிறுநீரகக் கற்கள் மற்றும் பித்தப்பை கற்கள் உருவாகுவதை தடுக்க என்று பல வகையில் உடலுக்கு ஆரோக்கியத்தை தரவல்லது.

மூலப்பொருள்

தக்காளி – 3
பச்சை மிளகாய் – 1
பூண்டு – 5 பல்
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை
கருவேப்பில்லை – சிறிது
பச்சை கொத்தமல்லி – சிறிது
கடுகு – 1 தேக்கரண்டி
வெந்தயம் – 1 தேக்கரண்டி
எண்ணெய் – தேவையான அளவு
ரசப்பொடி – 2 தேக்கரண்டி
தண்ணீர் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை

தக்காளி மற்றும் பச்சை மிளகாயை நல்ல பொடியாக அரிந்து வைத்துக் கொள்ளவும். சிறிய உரலில் அல்லது கல்லால் பூண்டை நன்றாக நசுக்கி வைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி அரிந்த தக்காளி, பச்சை மிளகாய், நசுக்கிய பூண்டு, உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், ரசப்பொடி, கருவேப்பிலை, பச்சை கொத்தமல்லி போட்டு நன்றாக கலக்கவும் அல்லது கையால் நன்றாக பிசைந்துவிடவும். பிறகு தாளிக்கும் கரண்டியில் எண்ணையை ஊற்றி, கடுகு மற்றும் வெந்தயத்தை போட்டு நன்றாக தாளித்து அந்த பாத்திரத்தில் போடவும்.

இறுதியாக ரசகலவை கொண்ட பாத்திரத்தை அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும். ஒரு கொதியில் நல்ல நுரையாக எழும்பி வரும்போது சிறிது தண்ணீர் ஊற்றி அடுப்பை அணைத்து விட்டு பாத்திரத்தை இறக்கிவைக்கவும்.

இந்த சுவையான மணமான ரசத்தை சுட சுட சாதத்தில் போட்டு அப்பளம் அல்லது வற்றல் அல்லது அசைவ பிரியர்கள் முட்டை அல்லது கருவாடு வறுத்து சாப்பிடலாம்.

குறிப்பு :

இந்த ரசம் 4 நபர்கள் தாராளமாக சாதத்தில் ஊற்றி சாப்பிடலாம் இல்லை டம்ளரில் ஊற்றியும் குடிக்கலாம். இந்த ரசம் சாப்பிடுவதால் வயிற்றில் உள்ள பூச்சிகள் அழிந்துவிடும்.

நாட்டுத் தக்காளி உபயோகிப்பது ரொம்ப நல்லது. நாட்டுத் தக்காளி இல்லாவிடில் பெங்களூரு தக்காளி உபயோகிக்கலாம்.

பின்னூட்டமொன்றை இடுக