ஆட்டு ஈரல் சூப்

Mutton Liver Soup

குறுந்தகவல்

ஒருவருவர்க்கு ரத்த சோகை என்றாலே அனைவரும் அறிவுறுத்துவது சைவத்தில் பீட்ரூட் போல அசைவத்தில் ஆட்டுஈரல். ஆட்டு ஈரல் சாப்பிடுவதற்கு சிறிது கடினமாக இருந்தாலும் உடலுக்கு அதிக நன்மை தரக்கூடியது. ஆட்டுஈரல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிட்டு பயனடையலாம். இதை சாப்பிடுவதால் ரத்த சோகை போகும், எதிர்ப்பு சக்தி அதிகரிக்க, கண் பார்வை சிறக்க என்று பல வகையில் சிறந்த சத்தான உணவாக இருக்கிறது.

மூலப்பொருள்

ஈரல்  – 1/4 கிலோ
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
இஞ்சி  – சிறியதுண்டு
பூண்டு பல் – 8
மிளகு – 1 தேக்கரண்டி
சீரகம் – 1/2 தேக்கரண்டி
வெங்காயம்  – 1 (மிதமான அளவு)
தக்காளி – 1 (மிதமான அளவு)   
உப்பு – தேவையான அளவு
கருவேப்பிலை – தேவையான அளவு
கொத்தமல்லி – தேவையான அளவு

செய்முறை

ஈரலை நன்றாக தண்ணீரில் கழுவிய பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் இல்லாமல் பிழிந்து வைக்கவும். வெங்காயம், தக்காளி, கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். மிக்ஸியில் மிளகு, சீரகம், இஞ்சி, பூண்டு மற்றும் தண்ணீர் ஊற்றி நல்ல மையாக அரைத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும். ( இந்த மசாலாவை சிறிய உரலில் நசுக்கி அல்லது அம்மியில் வைத்து அரைத்து உபயோகிக்க மிக சுவையாகவும் நல்ல மணமாகவும் இருக்கும்.)

ஒரு குக்கரில் சுத்தம் செய்து வைத்துள்ள ஈரல் அத்துடன் மஞ்சள் தூள், அரைத்து வைத்துள்ள மசாலா, நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி, கருவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, நன்றாக மூடி அடுப்பில் வைக்கவும். 4 அல்லது 5 விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு இறக்கி வைக்கவும். பிறகு அனைவர்க்கும் ஒரு டம்ளரில் சூப் மட்டும் சிறிய தட்டில் ஈரல் வைத்து குடுக்கலாம். யாராக இருப்பினும் இந்த சூப்பை விரும்பி சாப்பிடுவர்.

குறிப்பு : இந்த சூப் சாப்பிடுவதால் ரத்த ஓட்டத்தை சீராக்கி உடலில் புத்துணர்ச்சியை குடுக்கும். இதை அணைத்து வயதினரும் சாப்பிடுலாம். காரம் அதிகம் விரும்புகிறவர்கள் மிளகு தூள் சூப்பில் கலந்து சாப்பிடுலாம்.

பின்னூட்டமொன்றை இடுக