எள்ளு உருண்டை

குறுந்தகவல்

எள்ளில் கருப்பு மற்றும் வெள்ளை என்று இரு வகைகள் உண்டு. எள்ளு அனைவராலும் விரும்பி சாப்பிடக்கூடிய உணவுகளில் ஒன்று. எள்ளு என்றதுமே அனைவருக்கும் சட்டென்று நினைவுக்கு வருவது விநாயக சதுர்த்தி அன்று செய்யக்கூடிய எள்ளு உருண்டை தான். பெண்கள் மாதவிடாய் காலத்தில் சரியாக ஆகாமல் சிரமம் படும் பொழுது இதை வெல்லத்துடன் கலந்து சாப்பிட சிரமம் குறைந்து ஆரோக்கியமாக இருக்க உதவும். இது மட்டும் இன்றி மெலிந்து இருப்பவர்களும் இதை சாப்பிட உடம்பில் சிறிது எடை கூடுவதற்கும், மூட்டு தேய்மானம் ஆகாமல் இருக்க, சர்க்கரை நோய் வராமல் தடுக்க, என்று பல வகையில் உடல் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சிறந்த உணவாக விளங்குகிறது.

மூலப்பொருள்

எள்ளு – 100 கிராம்  
வெல்லம் – 100 கிராம்

செய்முறை

கருப்பு அல்லது வெள்ளை எள்ளு எடுத்து நன்றாக சுத்தமாக செய்து எடுத்து வைத்துக்கொள்ளவும். (கருப்பு எள்ளு சிறிது கசப்பு தன்மையை கொண்டது ஆனால் வெள்ளை எள்ளு கசப்பு தன்மையற்றது.) வெல்லத்தை நன்றாக தூளாக உடைத்து வைத்துக்கொள்ளவும். ஒரு வாணலியை நன்றாக ஈரம் இல்லாதவாறு துடைத்து அடுப்பில் வைக்கவும். அடுப்பை மிதமான சூட்டில் வைக்கவும். வாணலியில் எள்ளை போட்டு நன்றாக போட்டு வறுக்கவும். எள்ளு நன்றாக வெடிக்கும் பொழுது அடுப்பை அனைத்துவிட்டு இறக்கி வைக்கவும்.

இறக்கிய பிறகு வாணலியிருந்து ஒரு பத்திரத்தில் போட்டு ஆறவிடவும். நன்றாக ஆறியவுடன் மிக்சியில் போட்டு நல்ல மையாக அரைக்கவும். அரைத்த பிறகு ஒரு தட்டில் கொட்டவும். அத்துடன் வெல்லத்தை சேர்த்து நன்றாக கலக்கவும். எள்ளும் வெல்லமும் நன்றாக உருண்டை உருட்டும் அளவுக்கு பிசைந்து கலக்கவும். பிறகு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும். அதன் பின் அனைவருக்கும் பகிரவும்.

குறிப்பு : இந்த எள்ளு உருண்டை எப்பொழுது வேண்டும் என்றாலும் எளிதாக குழந்தைகளுக்கு பலகாரமாக குடுக்கலாம். அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடக்கூடிய சிறந்த இனிப்பு பலகாரமாகும். அதிகம் சாப்பிட்டால் அமுதமும் நஞ்சு போல அளவோடு சாப்பிட்டால் உடலுக்கு எந்த ஒரு ஆரோக்கிய கேடும் ஏற்படாது.

பின்னூட்டமொன்றை இடுக