குறுந்தகவல்

சொஜ்ஜி என்பது வயிற்று புண்ணை ஆற்றக்கூடிய சிறந்த காலை உணவாகும். இதில் பயத்தம் பருப்பு மற்றும் தேங்காய் சேர்ப்பதால் உடலுக்கு சிறந்த ஆரோக்கியத்தை கொடுக்கும். இதை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ருசித்து ரசித்து சாப்பிடக்கூடிய சிறந்த உணவாகும். இந்த சொஜ்ஜியில் உளுத்தம் பருப்பை தாளித்து போடுவதால் சாப்பிடும் போது நன்றாக நர நர என்று கடித்து சாப்பிட அருமையாக இருக்கும். 

மூலப்பொருள்

புழுங்கல் அரிசி – 1 ஆழாக்கு
பயத்தம் பருப்பு  – 1/2 ஆழாக்கு
தேங்காய் – 1/4 மூடி 
கடுகு – 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
காய்ந்த  மிளகாய்  – 3
எண்ணெய் – 1 மேஜைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

செய்முறை

புழுங்கல் அரிசி ஒரு பாத்திரத்திலும் மற்றும் பயத்தம் பருப்பை மற்றோரு பாத்திரத்திலும் தண்ணீர் ஊற்றி அரைமணி நேரம் ஊறவைக்கவும். தேங்காயை துருவி வைத்துக்கொள்ளவும். சாதம் வடிக்கும் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும். அரிசி மற்றும் பயத்தம் பருப்பை நன்றாக கழுவி வடிகட்டி வைத்துக்கொள்ளவும்.

நன்கு கொதி வந்தவுடன் பயத்தம் பருப்பை அதில் மெதுவாக பாத்திரத்தில் கை போடவும். இரண்டு கொதி வந்தவுடன் அரிசியை போடவும். பிறகு உப்பை போடவும். அரவேற்காடு அதாவது விரல்களால் நசுக்குவது போல் மற்றும் உதிரியாகவும் இருக்கும் பொழுது அடுப்பை அணைத்து விடவும். இந்த பாத்திரத்தை தாங்கும் அளவுக்கு ஒரு பாத்திரத்தையும் ஒரு தம்ளரையும் எடுத்து வைத்துக்கொள்ளவும்.

பிறகு சுவரின் ஓரமாக அந்த பாத்திரத்தை வைத்து விட்டு. பின்பு சாதம் மற்றும் பருப்பை வேகவைத்த பாத்திரத்தை நல்ல பெரிய துணியால் பிடித்து சுவரின் ஓரமாக உள்ள பத்திரத்தின் மேல் சிறிது சாய்ந்தவாறு வைக்கவும். கஞ்சி வடிய ஆரம்பித்தவுடன் இரு பாத்திரத்துக்கு இடையில் தம்பளரை வைத்து விழாதவாறு பார்த்துக்கொள்ளவும். கஞ்சி நன்றாக வடிந்ததும் ஒரு பரவலான பாத்திரத்தில் அல்லது எண்ணெய் சட்டியில் கொட்டி பரவலாக விட்டு உள்ளரவிடவும். அப்பொழுது தான் நல்ல உதிரியாக இருக்கும். பிறகு தேங்காய் துருவலை போட்டு கிளறவும்.

தாளிக்கும் கரண்டியை அடுப்பில் வைத்து தாளிக்கும் அளவுக்கு எண்ணெய்யை ஊற்றவும். பிறகு எண்ணெய் நன்றாக சூடானதும் கடுகு மற்றும் உளுத்தம் பருப்பை போடவும். சிறிது தாளித்ததும் காய்ந்த மிளகாயை போட்டு தாளித்து அடுப்பை அனைத்து விட்டு சாதம் உள்ள பாத்திரத்தில் கொட்டவும். நன்றாக கிளறி விட்டு பிறகு சுவைத்து பார்த்து உப்பு குறைவாக இருந்தால் தூள் உப்பு போட்டுக் கிளறிவிடவும்.

குறிப்பு : சொஜ்ஜியை குக்கரில் வைத்தால் சாதம் குழைந்துவிடும் ஆதலால் தான் வடிக்கவேண்டும் அப்பொழுதுதான் உதிரியாகவும் சாப்பிட சுவையாகவும் இருக்கும். இந்த சொஜ்ஜியை வெறுமனே சாப்பிடலாம் இல்லை என்றால் சர்க்கரைப் போட்டு கலந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். இது வயிற்றுப்புண் மற்றும் நெஞ்செரிச்சல் சரி செய்ய சிறந்த உணவாகும்.

பின்னூட்டமொன்றை இடுக