கேரட் பொரியல்

குறுந்தகவல்

கேரட் என்றாலே சிறியவர்கள் முதல் வயோதிகர்கள் வரை அனைவராலும் விரும்பி சாப்பிடக்கூடிய பச்சை காய்கறிகளில் ஒன்றாகும். இதில் இயற்க்கையாகவே தித்திப்பு இருப்பதால் வெறுமனே  கடித்து சாப்பிடலாம். இதை சாப்பிடுவதால் உடல் எடையை குறைக்கவும், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தவும் என்று பல விதத்தில் உடல் ஆரோகியத்துக்கு சிறந்த காயாக விளங்குகிறது. கேரட், தேங்காய், வெங்காயம், மிளகாய் என்று சேர்த்து பொரியலாக செய்து சாப்பிட்டால் மிக சுவையாகவும்  ஆரோகியமாகவும் இருக்கும். 

மூலப்பொருள்

கேரட்  – 1/4 கிலோ 
தேங்காய் – 1/4 மூடி
வெங்காயம்  – 1 (மிதமான அளவு)
கடுகு – 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய்  – 2
எண்ணெய் – 1 மேஜைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
கருவேப்பிலை – சிறிதளவு

செய்முறை

கேரட் நன்றாக கழுவி துருவி வைத்துக்கொள்ளவும். தேங்காய்யை துருவி வைத்துக்கொள்ளவும். வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடிப் பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். எண்ணெய் சட்டியை அடுப்பில் வைக்கவும். பிறகு எண்ணெய்யை ஊற்றி கடுகு மற்றும் உளுந்தை போட்டுத் தாளிக்கவும். நன்றாக தாளித்தவுடன் வெங்காயம் போட்டு வதக்கவும். நல்ல பொன்னிறமாக வதங்கியதும் பச்சை மிளகாய் மற்றும் உப்பு போட்டு வதக்கவும்.

சிறிது வதங்கியதும் தண்ணீரை லேசாக தெளிக்கவும். பிறகு நன்றாக வதக்கிய பின் சிறிது நேரம் தட்டை போட்டு மூடி வேகவைக்கவும். கேரட் நன்றாக வெந்ததும் கருவேப்பிலை மற்றும் தேங்காயை போட்டு வதக்கிய பிறகு அடுப்பை அனைத்து விட்டு இறக்கி வைக்கவும். இந்த பொரியலை வெறுமனே சாப்பிடலாம் அல்லது சாம்பார் மற்றும் ரசத்துக்கு தொட்டு சாப்பிடலாம்.

குறிப்பு : இந்த பொரியலை அனைவரும் விரும்பி சாப்பிடுவர். சாம்பார் சாதத்துக்கு கேரட் பொரியலை தொட்டு சாப்பிட மிக சுவையாக இருக்கும். சிறு குழந்தைகளுக்கு ஒரு கிண்ணத்தில் போட்டு சாப்பிட சொல்லலாம். இந்த பொரியலில் உளுந்து மற்றும் தேங்காய் சேர்த்திருப்பதால் நறுக்கென்று சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும்.

பின்னூட்டமொன்றை இடுக