சங்கரா மீன் குழம்பு

குறுந்தகவல்

மீன் கண்களுக்கு சிறந்த மருந்தாக திகழ்கிறது. அதுவும் சிறிய வகை மீன்கள் என்றால் இன்னும் சிறப்பு. சிறிய வகை மீன்களில் சங்கரா மீன் அதிக நன்மைகள் உள்ளது. இந்த மீன் சிறந்த கண் பார்வை கிடைக்க, சருமம் பளபளப்பு பெற, ரத்தம் அழுத்தம் குறைய என்று பல மருத்துவ குணங்கள் கொண்டது. இதில் புரத சத்து அதிகம் இருப்பதால் உணவு முறை கட்டுப்பாட்டில் உள்ளவர்கள் இதை சாப்பிடுவதால் உடல் எடை குறைய உதவியாக இருக்கும். இந்த மீனை வறுப்பதை விட குழம்பில் போட்டால் உடல் ஆரோகியதுக்கு நல்லது அதுவும் இல்லாமல் சுவையாகவும் இருக்கும்.

மூலப்பொருள்

சங்கரா மீன் – 1/2 கிலோ
புளி – பெரிய எலுமிச்சை அளவு
குழம்பு மிளகாய் தூள் – 4 தேக்கரண்டி
தேங்காய் சிறியது – அரை மூடி
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 2
இஞ்சி – சிறிய துண்டு
பச்சை மிளகாய் – 2
வடகம் – பாதி உருண்டை
(வடகம் இல்லாதவர்கள்
கடுகு – 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
வெந்தயம் – 1/2 தேக்கரண்டி
சீரகம் – 1/2 தேக்கரண்டி
சோம்பு – 1/2 தேக்கரண்டி)
நல்லெண்ணெய் – 3 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
கருவேப்பிலை – சிறியது
கொத்தமல்லி – சிறியது

செய்முறை

சங்கரா மீன் குளிர்ச்சியாக இருந்தால் சிறிது நேரம் தண்ணீர் விட்டு வைக்கவும். சிறிது நேரம் கழித்து மீனை லேசாக கழுவி தண்ணீரை கீழே ஊற்றி விடவும். பிறகு சங்கரா மீனின் அளவைப் பொறுத்து முழுசாகவோ அல்லது துண்டுகளாக வெட்டி மீனின் உள்ளே தேவையற்றதை எடுத்துவிட்டு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். மீனை அரிய தெரியாதவர்கள் மீன் கடையிலே வெட்டி வாங்கிக் கொள்ளவும்.

சுத்தம் செய்த மீனை கல் உப்பு மற்றும் மஞ்சள் தூள் போட்டு நன்றாக பிரட்டிய பிறகு தண்ணீர் ஊற்றி நன்றாக கலக்கி பின்பு தண்ணீரை கீழே ஊற்றி விடவும். இவ்வாறாக தண்ணீரை ஊற்றி இரண்டு அல்லது மூன்று கழுவி விடவும். அப்பொழுது தான் அதில் எதாவது கிருமிகள் இருந்தால் அறவே அழிந்துவிடும்.

ஒரு பாத்திரத்தில் புளியை போட்டு தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊறவைக்கவும். தேங்காயை துருவி வைத்துக்கொள்ளவும். ஒரு வெங்காயத்தை அரிந்துக் கொள்ளவும் (பொடிப் பொடியாக அரிந்தால் மிக்சியில் சீக்கிரமாக மையாக அரைக்க முடியும்). ஒரு ஜாரில் துருவிய தேங்காய் மற்றும் அரிந்து வைத்துள்ள வெங்காயத்தைப் போட்டு நல்ல மையாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.வெங்காயம், தக்காளி, இஞ்சி, கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை நல்ல பொடிப் பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். பச்சை மிளகாயை நீட்டுவாகாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். புளியை நன்றாக சாறு வரும் வரையில் நன்றாக கரைத்து குழம்பு தயாரிக்கும் பாத்திரத்தில் வடிகட்டி வைத்துக் கொள்ளவும். அதில் குழம்பு மிளகாய்த்தூள் மற்றும் உப்பு போட்டு நன்றாக குழி கரண்டியால் கலக்கவும். பிறகு தாளிக்கும் கரண்டி அல்லது எண்ணெய் சட்டியை அடுப்பில் வைக்கவும்.

எண்ணெய் சட்டியில் எண்ணெய்யை ஊற்றி பிறகு வடகம் (கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், சீரகம், சோம்பு) தாளிக்கவும். தாளித்தவுடன் அரிந்து வைத்துள்ள வெங்காயம், தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாய், கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை போட்டு நன்றாக வதக்கி குழம்பு வைக்கும் பாத்திரத்தில் போடவும். பின்பு குழம்பு பாத்திரத்தை தட்டு வைத்து மூடி அடுப்பில் வைத்து நன்கு கொதிக்கவிடவும்.

சிறிது நேரம் கழித்து தட்டை எடுத்து பார்க்கவும். நல்ல தள தள என்று கொதித்தவுடன் அரைத்து வைத்துள்ள தேங்காயை குழம்பில் கொட்டவும். தேங்காய் அரைத்த ஜாரில் சிறிது தண்ணீர் ஊற்றி கழுவி குழம்பில் ஊற்றவும். பிறகு நன்றாக குழம்பை கிண்டி விடவும். ஒரு 10 நிமிடம் கொதித்தவுடன் சுத்தம் செய்து வைத்துள்ள மீனை ஒவ்வொரு துண்டாக போடவும் அப்பொழுதுதான் கொதிக்கும் குழம்பு மேலே தெளிக்காமல் இருக்கும். மீனை போட்ட பிறகு ரெண்டு கொதி வந்தவுடன் நல்லெண்ணெய்யை ஊற்றி அடுப்பை அணைத்து விட்டு இறக்கி வைக்கவும்.

குறிப்பு: குழம்பில் உள்ள மீன் துண்டை எடுத்து சாப்பிட சுவையாக இருக்கும். இந்த மீன் குழம்பை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பி சாப்பிட கூடிய உணவாகும். இந்த குழம்பை சாதத்தில் ஊற்றியோ அல்லது இட்லி, தோசை, பூரிக்கு தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும்.

பின்னூட்டமொன்றை இடுக