வாழைக்காய் வறுவல்

குறுந்தகவல்

வாழைக்காய் என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது அமாவாசை அன்று பித்துருக்களுக்கு படைப்பதுதான். வாழைக்காயை வறுத்து படைப்பது வழக்கம். வாழை என்றாலே அதில் உள்ள தண்டு, பூ, காய் மற்றும் பழம் என்று ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு தனித்தன்மை உள்ளது. வாழைக்காயில் இரும்பு மற்றும் நார் சத்து இருப்பதால் செரிமானத்துக்கு உதவுகிறது. வாழைக்காயில் இருக்கும் வைட்டமின் ஏ மற்றும் சி நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது.

மூலப்பொருள்

வாழைக்காய் – 1
பூண்டு பல் – 5
குழம்பு மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை

வாழைக்காய் தோல் சீவிக் கொள்ளவேண்டும். பின்பு வாழைக்காயை மெலியதாகவோ தடியாகவோ இல்லாமல் நடுத்தர அளவில் அரிந்து வைத்துக்கொள்ளவும். பிறகு நன்றாக கழுவி ஒரு பாத்திரத்தில் போட்டு வாழைக்காய் மூழ்கும் வரை தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து வேகவைக்கவும்.

வாழைக்காய் அரை வேக்காடு வெந்தவுடன் தண்ணீரை வடித்து மிதமான காற்றில் ஆறவிடவும். பின்பு எண்ணெய் சட்டியை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய்யை ஊற்றவேண்டும். சிறிய உரலில் பூண்டை போட்டு இடித்து எண்ணெய் சட்டியில் போடவும்.

பின்பு வேகவைத்துள்ள வாழைக்காய் துண்டு, குழம்பு மிளகைத் தூள் மற்றும் உப்பை எண்ணெய் சட்டியில் போட்டு புரட்டி விடவும். மிதமான தீயில் வைத்து வறுக்க வேண்டும். சிறிது நேரத்திலே வாழைக்காய் வறுப்பட்டு விடும்.

குறிப்பு : வாழைக்காயை வேகவைத்து வறுப்பதால் எண்ணெய் அதிகம் தேவைப்படாது. இதை சாம்பார், ரசம் மற்றும் தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

பின்னூட்டமொன்றை இடுக