மரவள்ளி கிழங்கு அடை

குறுந்தகவல்

மரவள்ளி கிழங்கு என்றும் கப்பக்கிழங்கு என்றும் அழைப்பர். இந்த கிழங்கு வெறுமனே அல்லது வேகவைத்தும் சாப்பிடலாம். ஒரு சிலருக்கு இந்த கிழங்கு சாப்பிட பிடிக்காது. அதுவே அடையாக செய்து கொடுத்தால் யாராக இருந்தாலும் விரும்பி சாப்பிடுவர். இதனால் அவர்களுக்கு இந்த கிழங்கின் பலன்கள் கிடைக்கும். இந்த அடையில் அரிசி, மரவள்ளி கிழங்கு மற்றும் வெங்காயம் போன்ற பொருட்களை கொண்டு செய்யப்படுகிறது. இட்லி அரிசி உபோயகப் படுத்துவதால் அடை மிகவும் மென்மையாகவும் சுவையாகவும் இருக்கும். மரவள்ளி கிழங்கு எடை குறைப்பதற்கும், தலைவலி போக்கவும், வயிற்றுப்புண்ணை ஆற்றவும் என்று பல வகையில் உடலுக்கு நன்மை அளிக்கிறது, வெங்காயம் அதிலும் சிறிய வெங்காயம் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். இது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டும் என்றாலும் சாப்பிடலாம்.

மூலப்பொருள்

இட்லி அரிசி – 1 கிலோ
மரவள்ளி கிழங்கு – 1 கிலோ
பெரிய வெங்காயம் அல்லது சாம்பார் வெங்காயம் – 1/2 கிலோ
சோம்பு – 2 மேஜைக்கரண்டி
காய்ந்த குண்டு மிளகாய் – 4
தேங்காய் – 1/2 மூடி
கருவேப்பில்லை – சிறிது
பச்சை கொத்தமல்லி – சிறிது (அதிகம் சேர்த்தால் மிகவும் சுவையாக இருக்கும்)
பெருங்காயம் – 1 சிட்டிகை
நல்லெண்ணை – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் இட்லி அரிசியை போட்டு மற்றும் தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவும். குறைந்த பட்ச்சம் 5 மணி நேரம் ஊறவேண்டும். மரவள்ளி கிழங்கு தோலை உரித்து பொடிப் பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். ஐந்து மணி நேரம் கழித்து ஊறவைத்துள்ள அரிசி நன்றாக கழுவி வைத்துக்கொள்ளவும்.

அரிசியை நன்றாக வடிகட்டி கிரைண்டரில் போட்டு அத்துடன் மரவள்ளி கிழங்கு, காய்ந்த குண்டு மிளகாய், சோம்பு, உப்பு மற்றும் லேசாக தண்ணீர் தெளித்து அரைக்கவும். கிழங்கு நன்றாக அரைப்பட வேண்டும் ஆதலால் சிறிது மையாக அரைக்கவும். அரைபட்டவும் மாவை வழித்து எடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.

வெங்காயத்தை நல்ல பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். தேங்காயை துருவி வைத்துக்கொள்ளவும். பிறகு அரைத்த மாவு பாத்திரத்தில் அரிந்த வெங்காயம், துருவிய தேங்காய், கருவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து குழம்பு கரண்டியை வைத்து நன்றாக கலக்கவும்.

தோசை கல்லை அடுப்பில் வைக்கவும். அடுப்பின் அருகே ஒரு கிண்ணத்தில் தண்ணீர் வைத்துக்கொள்ளவும். பிறகு அடை மாவை எடுத்து இரண்டு முறை தோசை கல்லில் போட்டு கையால் வட்டமாக தட்ட வேண்டும். அடையை தட்டும் போது தண்ணீர் தொட்டு தட்ட வேண்டும் அப்பொழுது தான் தோசை கல்லின் அனல் கையை சுடாது மற்றும் எளிதாக தட்டவும் முடியும்.

தட்டியவுடன் அடையை சுற்றி நல்லெண்ணையை ஊற்றி வேகவைக்கவும். இட்லி பானையின் மூடியை எடுத்து அடையை மூட வேண்டும். இப்படி செய்வதால் அடை சீக்கிரமாக வேகும் இல்லை என்றால் வேகுவதற்கு சிறிது நேரமாகும் அவ்ளவுதான். சிறிது வெந்தவுடன் அதாவது 4 நிமிடம் கழித்து திருப்பி போட்டு வேக வைக்கவும். மறுபடியும் அடையை சுற்றி நல்லெண்ணையை ஊற்றவும். பிறகு இட்லி பானையின் மூடியை எடுத்து அடையை மூட வேண்டும்.

4 நிமிடம் கழித்து இட்லி பானையின் மூடியை எடுத்து பார்த்தால் நல்ல பொன்னிறமாக இருக்கும். அதன் பின் அடையை எடுத்து ஒரு தட்டில் வைக்கவும். இப்படியாக மீதம் உள்ள மாவையும் அடையாக செய்யவும். மிஞ்சினால் கவலை வேண்டாம் மீதமுள்ள மாவை ஃப்ரிட்ஜில் ஃப்ரீஸரில் வைத்து மறுநாள் உபயோகிக்கவும்.

இந்த சுட சுட அடையுடன் தேங்காய் சட்னி மற்றும் சர்க்கரை சேர்த்து சாப்பிடலாம் இல்லை என்றால் வெறுமனே சாப்பிடலாம்.

குறிப்பு

இந்த அடையை சூடாக சாப்பிடும் போது மிகவும் சுவையாக இருக்கும் அதுவும் தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டால் இன்னும் சுவையை கூடும். அடையாக சாப்பிட விருப்பம் இல்லை என்றால் தண்ணீர் ஊற்றி தோசைமாவு பதம் வரும் அளவிற்கு கலந்து தோசையாகவும் சுட்டு சாப்பிடலாம். இந்த அடை மாவு அளவு 6 பேர் சாப்பிடக்கூடியது.

பின்னூட்டமொன்றை இடுக